Skip to main content

“பட்ஜெட்டில் பாரபட்சம்; தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” -   அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
TN people will teach the BJP a lesson in the 2026 elections  says i periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு  தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாலை  அணிவித்துவிட்டு வரும்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.  ஊரகவளர்ச்சித்துறைக்கு லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு வந்த  நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறுப்பு ஆன கதையாய் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்தபடியே வருகிறார்கள். கடந்த ஆண்டு  ரூ.86ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய  ஊரக வளர்ச்சி திட்ட பணிக்கான நிதியை ரூ.76ஆயிரம் கோடியாக தொடர்ந்து  10ஆயிரம் கோடி, 10ஆயிரம் கோடியாக குறைத்தபடியே வருகிறார்கள். ஊரக  வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு  தமிழகத்திற்கு எந்த ஒரு நிதி அறிவிப்பும் அறிவிக்கவில்லை தமிழ்நாட்டில்  நடைபெறும் ஆட்சியை உலகமே திரும்பிப் பார்க்கிறது. அந்த அளவிற்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள்  தமிழகத்தை பார்த்துதான் தங்கள் மாநிலங்களில் நலத்திட்டங்களை  செயல்படுத்தி வருகின்றன.

தமிழகம் தலைசிறந்த மாநிலமாக உருவாகி வருவதை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான்  எந்த ஒரு நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. இருந்தாலும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய  நலத்திட்டங்களை தொடர்ந்து தடையின்றி செயல்படுத்தி வருகிறார்.  தமிழகத்திற்கு ரயில்வே திட்டம் மற்றும் சாலை வசதி திட்டம் எதுவும்  ஒதுக்கவில்லை. மதுரையிலும், கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச்  செயல்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தும் அதை  மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. நிதி ஒதுக்கீட்டில் தமிழக அரசை  தொடர்ந்து புறக்கணிப்பதற்குக் காரணம் தமிழக அரசும் சரி தமிழக மக்களும்  முன்னேறிவிடக் கூடாது என்று எண்ணம் அவர்களுக்கு உள்ளது.

பரந்த  மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய அவர்களுடைய(பா.ஜ.க) எண்ணம் குறுகிவிட்டது. மத்திய அரசு நிதியை நிறுத்தினாலும் தினமும் 9லட்சம் பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் மூலம் பணிகளை  வழங்கி வருகிறோம். 100 நாள் வேலைத் திட்டம் என்பது ஏதோ ஒரு வேலைத்  திட்டம் அல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞரும், அன்னை சோனியா காந்தி அவர்களும் கிராமப்புற ஏழை மக்களுக்காக செயல்படுத்திய திட்டம் கிராமங்களில் வேலையில்லா திண்டாட்டம் வரக்கூடாது என்ற நோக்கில்  செயல்பட்டதால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது கிராமங்களில்  வறுமை ஒழிந்தது. ஆனால் இப்போது ஆளும் மோடி தலைமையிலான பாஜக  அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைப்பதன் மூலம்  கிராமங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் உருவாக போகிறது.  

இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களுக்காக செயல்படுத்திய இந்த திட்டத்தை  மத்தியில் ஆளும் பாஜக அரசு பாழாக்கி வருகிறது. தமிழகத்தில் 80ஆயிரம்  கிராமங்கள் உள்ளன 12ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில்  வாழும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு கெடுத்து வருகிறது.  கிராமம் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என்பதை மத்தியில் ஆளும்  பாஜக அரசு மறந்துவிட்டது. அதை உணரும் காலம் விரைவில் வரும். இதைக் கருத்தில் கொண்டுதான் தமிழக முதல்வர் தமிழகத்தில் எவ்வளவு நிதி  நெருக்கடி இருந்தாலும் 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.  தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வசிக்கும் கிராம மக்களின் நலனில்  அக்கறை இல்லை என்பதை மத்திய அரசின் பட்ஜெட்டில் தெள்ளத்தெளிவாகக்  கூறிவிட்டது” என்றார்.

நிகழ்ச்சியின் போது வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை  மேயர் ராஜப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர்  நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட் மேரி, மாவட்ட  பொருளாளர் சத்தியமூர்த்தி,  தலைமை பொதுக்குழு உறுப்பினர்  கே.எஸ்.அக்பர், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர்  ப.க.சிவகுருசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட விவசாய அணி  அமைப்பாளர் இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம்,  மாநகர பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்ருல்ஹக் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்