அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை, தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் இன்று (17-10-11) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க உடைந்துவிட்டதாக தி.மு.க போலியாக செய்தி பரப்புகிறது. ஊடகங்களில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்றே சொல்கிறார்கள். சொந்த கட்சியை அவர்கள் நம்பவில்லை. கூட்டணியே நம்பி தான் இருக்கிறார்கள். ஆனால், அதிமுக சொந்த காலிலே நிற்கிறது. சொந்த காலில் நிற்பவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணிக்குள் புகைச்சல் தொடங்கிவிட்டது. விரைவில் தீ பற்றி திமுக கூட்டணி எரியப் போகிறது. எரிந்த பின், கூட்டணி கட்சிகள் வெளியேறப்போகிறார்கள். செய்தி தாள்களை பார்க்கும் போது திமுக கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது” என்று பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பேசிய இந்த கருத்துக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். ஏனென்றால் அவருக்கு வேறு வேலை கிடையாது. திமுக கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொழுத்தவும் முடியாது, எரிக்கவும் முடியாது. இதுயெல்லாம், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஏற்படுமே தவிர முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் சிறுதுளி கூட ஏற்படாது. ஒரு இயக்கத்தின் தலைமை பலவீனமாகிவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்துவிடும். இன்று எடப்பாடி பழனிசாமியின் தலைமை மிகவும் பலவீனமாகிவிட்டது. அதனால் தான் அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்