திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான மேட்டுப்பட்டி சேவாசங்கம், காமராஜர் சாலை, கீழக்கோட்டை பொன்விழா மைதானம், பூஞ்சோலை பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
பூஞ்சோலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார் நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா, துணைத்தலைவர் ஆனந்தி, சி.ஐ.டி.யூ கன்வீனர் முருகன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் சூசை மேரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னாளபட்டி பேரூர் கழகச் செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து பெருந்திரளாக கூடியிருந்த வாக்காளர் மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “சின்னாளபட்டிக்கும் எனக்கும் 33 வருட சொந்தம் உண்டு முதன் முதலாக நான் சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பாக போட்டியிட்ட போது என்னை கைகொடுத்து தூக்கி விட்டவர்கள் இங்குள்ள கைத்தறி நெசவாளர்கள் அவர்களை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். காரணம் திமுகவில் சித்தையன் கோட்டை மணிசெட்டியாரில் தொடங்கி ஏ.எம்.பி.நாச்சியப்பன் தற்போது வரை எனக்கும் திமுகவிற்கும் ஆதரவு கொடுப்பவர்கள் சின்னாளபட்டி நகர மக்களே. கைத்தறி நெசவாளர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர்கள் கலைஞர் வழியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருபடி மேலே போய் கைத்தறி துறையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இங்குள்ள நெசவாளர்களில் வீடு இல்லாதவர்களுக்கு விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள். கட்டிக்கொடுக்கப்படும் அதற்கென 9 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இது தவிர ஜவுளிபூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு தேர்தல் முடிந்தவுடன் பூஞ்சோலை பகுதியில் நெசவு பூங்கா திறக்கப்படும் . இங்குள்ள பட்டியலின மக்கள் வீடு வசதி வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். அவர்களில் வீடு இல்லாத 80 பேர்களுக்கு புதிய வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் கட்டிக்கொடுக்கப்படும்.
திமுக ஆட்சியின் போது ரூ.12 கோடி மதிப்பில் நிலக்கோட்டை அருகே பேரணையிலிருந்து குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டது. தற்போது ரூ.553 கோடி மதிப்பில் வைகை அணையிலிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டு சின்னாளபட்டி மற்றும் திண்டுக்கல் மாநகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. வைகை அணையிலிருந்து குடிதண்ணீர் கொண்டு வந்து சின்னாளபட்டிக்கு விநியோகம் செய்யும் போது தினசரி பொதுமக்கள் குடிதண்ணீர் பெறமுடியும் .
மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சி.பி.எம்.கட்சி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் மண்ணின்மைந்தர் ஆவார். மற்ற வேட்பாளர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு அவர்களை சந்திக்கக் கூட நீங்கள் வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலைமை வரும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய சி.பி.எம்.வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடிப்பதோடு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சுங்குடி தொழிலாளர்கள் நலனை காக்க முடியும்.
ஆத்தூர் தொகுதியில் கன்னிவாடி, அகரம் பேரூராட்சி பகுதியில் நூறுநாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமமில்லாமல் உள்ளனர். இதுபோல சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியிலும் விரைவில் நூறுநாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு நிதியுதவியுடன் செயல்படும் இந்த திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது” என்று கூறினார்.