நேற்று (21.09.2021) சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில், வடசென்னை கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் பெரியார், அண்ணா, வைகோ ஆகியோரின் பிறந்தநாள் விழாக்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஜீவன் தலைமை தாங்கினார். விழாவில், வைகோவின் 77வது பிறந்தநாள் விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும், சகாப்தம் என்ற யூடியூப் சேனலையும் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் 770 நபர்களுக்கு துரை வைகோ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் துரை வைகோ நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “மதிமுக இயக்க வரலாற்றிலும், வைகோவின் வரலாற்றிலும் வைகோவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது இதுதான் முதல் நிகழ்ச்சி.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் கூறுகின்றனர். நிறைய பேர், என்னை பதவிக்கு வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நான் அதற்குத் தயாராக வேண்டும்; பக்குவப்பட வேண்டும்; சொல்லாற்றல், செயலாற்றலைப் பெருக்க வேண்டும். தொண்டர்கள் கூறுவது போன்று மக்களும் நான் பதவிக்கு வர வேண்டும் என்று கூறும்போது நான் பதவிக்கு வருவேன்” என்று கூறினார்.