தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கவுதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், நடிகை கவுதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 25 ஆண்டுகாலமாக கட்சியிலிருந்து வருகிறேன்; ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர். மிகுந்த மன வேதனையுடன் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கவுதமி, அலுவலகத்திற்கு வருவார், தொலைப்பேசியில் பேசுவார். அவர் தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருக்கிறார். இன்று காலைகூட அவருடன் தொலைப் பேசியில் நான் பேசினேன். கவுதமியின் சொத்தை அவருடன் 25 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நபர் (அழகப்பன்), அபகரித்துவிட்டதாக பத்திரிகை செய்தி கொடுத்ததும் அவரை நான் தொடர்பு கொண்டேன். மேலும், அன்று பா.ஜ.க.வில் இருந்து ஒரு குழு அமைத்து அவர்கள் மூலம் உயர் அதிகாரியிடம் நேரம் கேட்டுவாங்கி, கவுதமியை அவரை சந்திக்க வைத்தோம். கவுதமியும் அந்த உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் நான் எதிர்பார்த்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காதது எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
பா.ஜ.க.வில் இருந்து யாரோ ஒருவர், தி.மு.க.வைச் சார்ந்த அல்லது நடுநிலையோடு இருக்கும் காவலர்களை அணுகி, கவுதமி வழக்கில் தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளச் சொன்னால் செய்வார்களா? கவுதமி கொடுத்த புகார், ஆமை, நத்தை வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவர் புகார் கொடுக்கப்பட்ட அந்த நபர் (அழகப்பன்) சில மத்திய அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் அறக்கட்டளைச் சார்ந்து இருக்கிறார் என்பதெல்லாம் அவரின் தனிப்பட்ட கருத்து. இதில் கட்சி என்றும் தலையிடாது. புகார் கொடுக்கப்பட்டு, புகாரில் முகாந்திரம் உள்ளது என்றால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜ.க.வுக்கும் அந்த நபருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் பா.ஜ.க.வே கிடையாது. இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்ந்தும் நான் கவுதமியுடன் நிற்கிறேன்” என்று தெரிவித்தார்.