சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், தேர்தலில் கூட்டணி போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கட்சியின் நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது, “தற்போதைய காலகட்டம், நாட்டுக்கும் காங்கிரஸுக்கும் மிக சோதனையான காலகட்டம். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தனிப்பட்ட முறையில் திருதியான விஷயம். பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார்.
தற்போதைய காலக்கட்டம் நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிக சோதனையான காலகட்டம். பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கைப்பற்றி வருகிறது எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர்,காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக இந்திய ஒற்றுமைப் பயணம் அமைந்துள்ளது. பெருந்திரளான மக்கள் அதில் பங்கேற்றனர். இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டதுடன் எனது அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன் எனக் கூறினார்.
எனது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டதாக சோனியா காந்தி கூறியது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2024 தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.