விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திமுகவின் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) சார்பில் திருச்சி சைபர் கிரைம் போலீல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக சாட்டை திருமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று (11.07.2024) கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரை முருகனை விடுவித்து உத்தரவிட்டார்.
முன்னதாக சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கொலைகாரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், கைது பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா? எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தார்கள்? முன்னாள் முதல்வர் கலைஞரை எங்கே அவர் அவதூறாக பேசினார்? அவர் பாடியது ஏற்கெனவே இருந்த பாட்டுதானே? நானும் அதே பாட்டை பாடுகிறேன். இப்ப நான் பாடிவிட்டேன், என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்” என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (12-07-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “குறிப்பிட்ட சாதியைச் சொல்லி பாட்டு பாடி அந்தச் சமூகத்தை மீண்டும் அவமதித்துள்ளார் சீமான். தான் இயக்கிய ‘தம்பி’ படத்தில் அந்தச் சொல்லை பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்டிருக்கிறார். சாதி ரீதியான, மத ரீதியான பிரச்சனையை உருவாக்க சீமான் நினைக்கிறார். மாற்றி மாற்றிப் பேசும் சீமான் தனது மனநிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது” என்று கூறினார்.