வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர், “நான் ஒவ்வொருரை பற்றியும் நங்கி தெரிந்து வைத்துள்ளேன். என்னை இனி யாரும் ஏமாற்ற முடியாது. போன முறை நான் ஏமாந்துவிட்டேன். அது கொரானா காலம். அப்போது என்னால் வெளியே வேகமாக வரவோ போகவோ முடியவில்லை. இல்லையென்றால், கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருப்பேன். ஆனால், சில துரோகங்களை சேர்ந்து நடத்தினார்கள். அதுவும் எனக்கு தெரியும்.
ஆகையினால், அந்த துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்தக்கூடிய ஆற்றல் எனக்கு உண்டு. நான் யாரையும் மன்னிப்பேன். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன். என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால், எனது இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க மாட்டேன். நான் வளர்த்த கட்சி, 60-70 ஆண்டுகளாக இந்த கட்சியை நான் வளர்த்தேன்.
ஆகையினால் இந்த கட்சி என்னுடைய கட்சி. இது நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்வதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை எல்லோரும் நல்லவர்கள் என நான் நினைத்துவிட்டேன். அதன் விளைவாக தான் எனக்கு சில பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பாடத்தை நான் திரும்பி பார்க்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.