தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று (24-08-24) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது . இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்சினையே இல்லை, பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே என்றால், அப்படியா சந்தோஷம் என்பார். அதை மகிழ்ச்சியாக சொல்கிறாரா, என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? என புரியாது” எனப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் பேசியது கூட்டத்தில் இருந்த அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அதே மாதிரிதாங்க. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடு வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு” எனத் தெரிவித்தார்.