நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.
அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார்.
மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.