மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்கிற நிலைப்பாட்டில் தமிழக பாஜக மிக உறுதியாக உள்ளது என மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை, பாண்டி கோவில் அருகே பாஜக ஒ.பி.சி அணி சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், “தேசிய பிற்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து பாஜக மட்டுமே. காங்கிரஸ் - திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒ.பி.சி பிரிவுக்கு இட ஒதுக்கீடு செய்யவில்லை. ஒ.பி.சி பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு திமுகவால் கிடைத்தது என சொல்வது வேடிக்கையானது. ஒ.பி.சி பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது மோடி தலைமையிலான அரசு மட்டுமே. ஒ.பி.சி பிரிவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தீவிரமாக அமுல்படுத்த வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது. பாஜக தமிழ் மண்ணின் உரிமையை என்றும் விட்டு கொடுக்காது. தமிழக மக்கள் நலனில் பிரதமர் அக்கறை செலுத்தி வருகிறார். மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்கிற நிலைப்பாட்டில் தமிழக பாஜக மிக உறுதியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கூடாது என தமிழக பாஜக சார்பில் மத்திய அரசை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என கூறினார்.