கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் பொது நிகழ்ச்சிகள், அரசியல், சமய, மத நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தடை விதித்துள்ளன. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளன. அந்த உத்தரவுகளை அரசு அமைப்புகளே மீறி வருகின்றன. மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு பொதுமக்களை வரவழைக்கும் அதிகாரிகள், அங்கே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதேயில்லை.
இதனைப் பார்த்து அரசியல் கட்சிகளும் விதிகளை மீறத் துவங்கியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய மா.செ.வாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தினமும் தனது வீட்டுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்கிற பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை வரவழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மாவட்ட கவுன்சில் செயலாளரான இ.பி.மனோகரன் என்பவர் கரோனா நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய கட்சியினர் சிலர், மார்ச் மாதம் முதல் கரோனா நலத்திட்ட உதவிகள் செய்து மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றார் எங்கள் தெற்கு மா.செ வேலு எம்.எல்.ஏ. இப்போது கட்சியினரே அவர் மீது அதிருப்தியாக உள்ளனர். முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உட்பட அனைவரையும் பாதுகாப்பாக இருங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு போகாதீர்கள் என எச்சரிக்கை விடுத்து வந்தவர் தற்போது அடிக்கடி கட்சி கூட்டம், அணி நிர்வாகிகள் கூட்டம், செயற்குழு கூட்டம் என கட்சி நிர்வாகிகளை கட்சி அலுவலகத்துக்கு வரவைக்கிறார்.
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 2ந் தேதி திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்துக்கு வரவைத்து கூட்டம் நடத்தினார். கூட்டம் நடந்த இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது, அதை மறுக்கவில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும்போது கட்சி நிர்வாகிகள் கார்களில் 4 பேர், 5 பேர் என வந்தார்கள். அப்படி வந்தவர்களை தனி அறையில் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து பேசிவிட்டு செல்லச் சொல்ல அதன்படி செய்தார்கள். இந்த கூட்டம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இப்படி சில கூட்டங்கள் நடந்துள்ளன.
கட்சி தலைமையே அனைத்து கூட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் முறையில்தான் நடத்துகின்றன. பல மாவட்ட செயலாளர்களும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் தான் மாவட்ட கூட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இங்கு மட்டும் தான் நேரடி கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கரோனா லாக்டவுனில் மட்டும் அதிகாரபூர்வமாக, அதிகாரபூர்வமற்ற முறையில் 10க்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த கூட்டங்களை கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைக்க சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் இ.பி.மனோகரன். 59 வயதானவர், மின்சாரவாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், மாவட்ட கட்சி அலுவலகத்தின் பணிகளை அதன் மேலாளரோடு சேர்ந்து செய்து வந்தார். அவருக்கு கரோனா வந்து இறந்துள்ளார். இது கட்சி அலுவலகத்துக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அலுவலக பணியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதுப்பற்றி அவர் கண்டுக்கொள்ளாமல் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
அவருக்கு கரோனா வந்தால் நன்றாக சிகிச்சை பெற்று குணமாகும் அளவுக்கு பண வசதி உள்ளது, கூட்டத்துக்கு வரவைக்கும் மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள், ஊழியர்களுக்கு வந்தால், அப்படிப்பட்ட சிகிச்சை கிடைக்குமா என கேள்வி எழுப்பினர்.
திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. அதன் வழியாக கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு உத்தரவுகள், ஆலோசனைகள் வழங்கலாம். அவர்களை பாதுகாப்பாக பணியாற்ற வையுங்கள். உங்கள் அரசியல் விளம்பரத்துக்காக தொண்டர்களை தொடர்ச்சியாக பலி கொடுக்காதீர்கள்.