திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 30 வார்டுகளை கைப்பற்றியது. அதோடு கூட்டணி கட்சிகள் 7 வார்டுகளை கைப்பற்றின. அதேபோல், சுயேட்சையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற 5 பேர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் ஆளும் கட்சியான திமுக 42 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக 5 கவுன்சிலர்களையும், பா.ஜ.க. ஒரு கவுன்சிலரையும் வென்றுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பெண் மேயருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், திமுக சார்பில் வெற்றி பெற்றிருக்கும் 18 பெண் கவுன்சிலர்களிடையே போட்டி நிலவிவருகிறது. இதில் கட்சிக்காக உழைத்தவர்களுக்குத்தான் மேயரையும், துணை மேயரையும் கொடுக்க வேண்டும். அதிலும் அனைத்து தரப்பினர் பாராட்டுக்கும் உரியவராகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்வதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தீவிரம் காட்டி வருகிறார் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.
இது சம்பந்தமாக அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே திண்டுக்கல் யூனியனை திமுக கைப்பற்றி ராஜா யூனியன் சேர்மனாக இருந்து வருகிறார். அதனால் அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநகரில் மேயர் வாய்ப்பு கொடுக்க வாய்ப்பில்லை. அதனடிப்படையில் இந்திராணி, சுவாதி ஆகிய கவுன்சிலர்கள் மேயர் ரேஸ்சில் இல்லை.
அதுபோல் கிறிஸ்தவர்களில் மாநகர செயலாளராக இருக்கக் கூடிய ராஜப்பா 32வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் கட்சிக்காக கடந்த பத்து வருடங்களாக உழைத்து வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் ராஜப்பாக்கு துணை மேயர் கொடுக்க அமைச்சர் ஐ.பி. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆரோக்கிய செல்வி, ஜெயந்தி கென்னடி, ஸ்டெல்லாமேரி ஆகியோரும் மேயர் ரேசில் இல்லை.
அதற்கு அடுத்தபடியாக விஜயா, மனோரஞ்சிதம், பானுப்பிரியா ஆகியோர் இருக்கிறார்கள் அவர்களும் மேயர் ரேஸ்சில் வர வாய்ப்பு இல்லை. அதுபோல் ஏற்கனவே முஸ்லிம் மதத்தை சேர்ந்த பசீர் அகமது நகர்மன்றத் தலைவராக இருந்திருப்பதால் பெளமிதாபர் பர்வின், ஹசீனாபர்வீன் ஆகியோரும் மேயர் ரேஸ்சில் இல்லை. முன்னாள் கவுன்சிலர் அருள்வாணியும் ரேசில் இல்லை.
அதேசமயம், கவுன்சிலர் சரண்யாவின் மாமனார் சந்திரசேகர், பண பலத்துடன் எப்படியும் மருமகளுக்கு மேயர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்தார். ஆனால் அமைச்சர் ஐ.பி.யோ பணத்தைவிட கட்சிக்கு உழைத்தவர்கள் தான் முக்கியம் என்று கூறி சந்திரசேகரை ஓரங்கட்டி இருக்கிறார்.
லட்சுமி, நித்தியா, சுபாஷினி ஆகிய மூன்று பேர் மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் கட்சிக்காக உழைத்து வரும் முன்னாள் கவுன்சிலரான தக்காளி ராம மூர்த்தியின் மருமகளான நித்தியா மேயர் ரேஸில் இருந்து வருகிறார். அதுபோல் வெற்றிபெற்ற முன்னாள் கவுன்சிலர் இளமதியும் மேயர் ரேசில் இருப்பதாக தெரிகிறது. மேலும், லட்சுமிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது நித்தியா, இளமதி, லட்சுமி ஆகியோருக்கு இடையே மேயர் ரேஸ் போட்டி இருப்பதாக தெரிகிறது.
இருந்தாலும் கூட இந்திராணி மேல் மட்டம் வரை செல்வாக்கு இருப்பதாக கூறி அதன் மூலம் மேயர் சீட்டை தக்கவைக்க காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தான் பதவி கொடுக்கப்படும் என்று கூறி இருப்பதின் மூலம் பார்க்கும் போது, நித்தியா, லட்சுமி அல்லது இளமதி ஆகியோரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும்கூட இந்திராணி மேல்மட்ட சிபாரிசின் பேரில் போட்டிக்குள் வரும்போது, இளமதி, நித்தியா, இந்திராணி ஆகிய 4 பேரும் கடைசி கட்ட நிலவரப்படி மேயர் ரேசில் இருந்து வருகிறார்கள்” என்று கூறினார்கள்.