கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் இருந்தன. இந்நிலையில், 11 ஆம் தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 136 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கர்நாடகத் தேர்தல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், “தமிழ் மண்ணில் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. திமுக கூட தமிழகத்தில் பல முறை தூக்கி எறியப்பட்டது. எம்ஜிஆர் இருந்த பொழுது திமுக வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. கலைஞர் மட்டும் அவரது தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். திமுக பலமுறை துடைத்தெறியப்பட்டுள்ளது. அதுபோல் தேர்தலை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாஜகவிற்கு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மண்ணில் பாஜக ஆட்சி வராது என்பதெல்லாம் அவரது கற்பனை. அவரது திருப்திக்காக சொல்லிக் கொண்டு இருக்கலாமே தவிர களத்தில் பாஜகவிற்கு வரவேற்பு உள்ளது. அதேபோல் கர்நாடகத்தில் பாஜகவிற்கு 2018ல் இருந்த வாக்கு சதவீதம் தான் தற்போதும் உள்ளது” எனக் கூறினார்.