நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நேற்று (06.03.2024) இரவு தமிழகத்திலிருந்து சென்ற பாஜக மூத்த நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழக வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்று (07.03.2024) காலை அகில இந்திய அமைப்புச் செயலாளர் சந்தோஷ் வீட்டில் தமிழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். பிரதமர் இன்றும் நாளையும் வெளி மாநில பயணத்தில் இருப்பதால் ஒன்பதாம் தேதி (09.03.2024) டெல்லி திரும்பியவுடன் தேர்தல் கமிட்டி கூடி பா.ஜ.க.வின் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் பத்து வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்க வாய்ப்பிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள த.மா.க, த.ம.மு.க, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.