100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. மேற்கு வங்கத்திற்கு என பட்ஜெட்டின் போது எதுவும் ஒதுக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய போராட்டமானது இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி இது குறித்து பேசுகையில், “100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை முடிப்பதில் மேற்கு வங்க அரசு முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்திற்கான 7 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும் வீட்டு வசதி மற்றும் சாலை வசதி திட்டங்களுக்கான நிதியையும் இன்னும் அளிக்கவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையையும் நிறுத்தி விட்டது. மொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு என எதுவும் ஒதுக்கவில்லை. அதோடு மேற்கு வங்கத்தை மத்திய அரசு பாரபட்சமாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாநில அரசின் சட்டப்பூர்வ தர்ணா போராட்டம் நடத்துவேன்” என்றார்.