சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், நேற்று இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த காமகோடி, “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது. பண்டிகையின் போது நான் பஞ்சகவ்யம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் உள்ளது.
அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்புச் சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கோமியம் தொடர்பாகச் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தைக் குடித்தால் உடல் நலப் பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை” என்றார். இருப்பினும் அவரின் கருத்துக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, “மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள், ஆனால், விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை(மாட்டு சிறுநீர்) பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். மியாமர், ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கூட கோமியத்தை மருந்தாக எடுத்துக்கொள்கிறார்கள். 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது. கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.