தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்று, விவாசாயிகளிடையே பேசிய போது, “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்.
அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். விஜய்யின் கருத்து ஆதரவாகவும், எதிராகவும் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியபோது, “பரந்தூரில் மக்கள் 910 நாட்களாக போராடுகிறார்கள்; ஆனால், விஜய் 910வது நாளில் அங்கு சென்றிருக்கிறார். விஜய் பரந்தூருக்கு பறந்து போனாரா? இல்ல மறந்து போனாரா? இதுவரை பரந்தூர் என்பதே மறந்துபோன விஜய், திடீரென பறந்து போனார் என்றால் என்ன அர்த்தம்? சினிமாவில் நடிக்கும் போது பரந்தூர் எல்லாம் நமது காதிலே விழாது; மாறாக; 'டேக்... டேக்..' என்று மட்டுமே காதில் விழும். ஆனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும்போது உடனே டேக் ஆஃப் ஆவதற்கு பரந்தூர் தேவைப்படுகிறது. முதல்நாளே விஜய் இதற்காக குரல் கொடுத்திருக்கலாமே? ஏன் இப்போது குரல் கொடுக்கிறார்? நீங்களே சொல்லுங்கள் இது பொதுநலமா? அல்லது சுயநலமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.