அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறார்கள். அதிமுக சார்பில், ராம்நாடு திருப்பத்தூர் தொகுதியில் இதுவரை யார் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. ஆனால் அக்கட்சி நாளிதழின் பத்திரிகையாளர், இதுவரை வாக்காளர்களுக்கு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அடுத்தக் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
மணி என்ற பெயரோடு அதிமுக அமைச்சரவையில் முக்கியமான இரண்டு அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர், வீட்டுக்கு வீடு பட்டுப்புடவை கொடுத்து வருகிறார். மற்றொரு அமைச்சர், தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதுபோலவே அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், விஐபிக்கள் போட்டியிடும் தொகுதி முழுவதும் வித்தியாசம் வித்தியாசமாக பணம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
இது பொதுத்தேர்தலா? அல்லது இடைத்தேர்தலா? என பரிசுப் பொருட்கள் வந்து விழுவதைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதற்கு எப்படி போட்டிப் போடுவது என திமுக வேட்பாளர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள். திருப்பத்தூர் தொகுதியில் களம்காண திட்டமிட்டுள்ள திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், மருது அழகுராஜின் பண விநியோகத்தைப் பார்த்து மலைத்துப்போய் நிற்கிறார் என்கிறது திமுக வட்டாரம்.