தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவகாசம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முதன்முறையாகக் களம் காண்கிறார். அதேபோல், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனும் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியானது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுவதால் கோவை தெற்கில் மும்முனை போட்டி நிலவுகிறது.
உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால் என மாநகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியத் தொகுதி கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், வெளி மாநிலத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழக்கூடிய தொகுதி. இந்த தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Actresss #AksharaHaasan Dancing in Coimbatore south campaign. #KamalHaasan @Iaksharahaasan pic.twitter.com/rrqxC3rVM0
— Ponmanaselvan S (@IamSellvah) April 4, 2021
இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அமைப்பு ரீதியான சந்திப்பில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், பெண்கள், இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான உத்திகளையும் கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார். இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் பொதுமக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மற்றொரு புறம் தனது தந்தைக்கு ஆதரவாக கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, இன்று அக்ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து வாக்குச் சேகரித்தனர். அப்போது, இசையோடு வரவேற்ற மக்களை அக்ஷரா, சுஹாசினி நடனமாடி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், வானதி சீனிவானும் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களைச் சந்தித்து இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்களின் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தால், அந்த தொகுதி களைகட்டியுள்ளது.