புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டதையடுத்து, புதிய துணைநிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று (17.02.2021) தெலுங்கானாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த அவர், ராஜ்நிவாஸில் தங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 31வது துணைநிலை ஆளுநராக, உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜி உறுதிமொழி மற்றும் ரகசியப் பிரமாணம் செய்து வைக்க, அதனை ஏற்றுக்கொண்டு தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, தமிழிசைக்கு சால்வை அணிவித்து, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், அலுவலகத்திற்கு வந்து கோப்பில் கையெழுத்திட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 5வது பெண் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்குத் துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளைக் கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. பதவிப் பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நிறைவேறியது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆளுநர், துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன். நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அளித்தப் புகார் குறித்து ஆலோசித்து, சட்டப்படி முடிவெடுப்பேன். கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்.பி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் என்.ஆர். பாலன் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.