"மாநிலங்களவையை பொறுத்த வரையில் எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம், ஆனால், மாநில அரசியலில் இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்க இருக்கிறது" கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தில்லி மாநிலங்களவை உறுப்பினராக இருந்து நேற்றோடு ஓய்வு பெற்ற மைத்ரேயன் கூறிய வார்த்தைகள்தான் இது. அதுவும் இந்த செய்தியை மாநிலங்களவையில் தன்னுடைய கடைசி உரையில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மைத்ரேயன், தொடர்ந்து மூன்றுமுறை ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார். அந்த வகையில் அதிமுகவில் இதுஒரு பெரிய சாதனை என்று தான் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவா? பன்னீரா? என்ற நிலை ஏற்பட்டபோது அவர் ஓபிஎஸ் பக்கம் நின்றார். மேலும், தன்னுடைய மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைவதை குறிப்பிட்டு, அவர் நடந்து முடிந்த மக்களவை தேர்லி்ல் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், நான் இறந்தால் கூட எனக்கு இரங்கல் தெரிவிக்காதீர்கள் என்று கூறினார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தவில்லை என்பதை இதற்கு காரணமாக கூறினார்.
இதை அதிமுக உறுப்பினர்கள் உட்பட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், நிறைவாக பேசும்போது மாநில அரசியலில் இனி சாதிப்பேன் என்று அவர் கூறியதை தான், அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் அதிமுக முன்னணியினர். எதை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார் என்ற விவாதம் இப்போதே கட்சியினர் மத்தியில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், ஓபிஎஸ் தரப்பும் அவரை பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், அவர் தான் ஜொலிப்பேன் என்பதும், அதுவும் சூரியோதயம் என்று அவர் கூறுவதும், சூரிய கட்சியை மனதில் வைத்துதான் என்று ஒரு டாக் அரசியல் அரங்கில் ஓடுகிறது.