நேஷனல் கணேசன், சின்னராஜ், தேவராஜ் போன்ற முன்னாள் திமுக நிர்வாகிகள் விருதுநகரிலிருந்து மதுரை சென்று மு.க.அழகிரி இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
ஆலோசனை எப்படி நடந்ததாம்? பிரதான கேள்வி என்னவாம்?
“யப்பா.. உங்க ஊர்ல இருந்து எத்தனை (பஸ்) வண்டி?” என்று அண்ணன் கேட்க, “அண்ணே.. அதுவந்து.. ஒரு ரெண்டு மூணு வண்டில ஆட்களோட (தொண்டர்கள்) நாலாம் தேதி இங்கயிருந்து கிளம்பி அஞ்சாம் தேதி சென்னை வந்திருவோம். பேரணில கலந்துக்குவோம். சென்னையைக் கலக்கிருவோம்ணே.” ஒருவர் பதில் சொல்லி முடிக்க, “அடுத்து.. யப்பா உங்க ஊர்ல இருந்து……” இப்படித்தான் அண்ணன் கேட்க, நாங்கள்லாம் அத்தனை வண்டி.. இத்தனை வண்டின்னு சொல்லிட்டி வந்திருக்கோம்.” என்றார்கள் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்.
அமுதன்
‘விருதுநகர் மாவட்டத்தில் பேருந்துகளில் நிரப்பும் அளவுக்கு அழகிரி ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டபோது “ஆளுக்கா பஞ்சம்? ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு சம்பளம் 500 ரூபாய். அப்புறம் சாப்பாடு, அது இதுன்னு செலவு நெறய இருக்கு. சென்னைல ஸ்ட்ரெங்த் காட்ட வேண்டாமா?” என்றார்கள் வெளிப்படையாக.
அழகிரி விசுவாசிகளின் விஸ்வரூப நம்பிக்கையாக இருப்பது என்ன தெரியுமா? “எப்படியும் அண்ணன் ரஜினி கூட கூட்டு வச்சிருவாரு. அவரு நடந்துக்கிறத பார்த்தாலே தெரியுது.” என்கிறார்கள்.
நேஷனல் கணேசன்
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரால் ஓரம்கட்டப்பட்ட திமுக நிர்வாகிகள் அத்தனைபேருமே அழகிரி ஆதரவாளர்களாக இங்கே பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில், அண்ணா காலத்து சீனியரான, முன்னாள் திமுக மாநில இலக்கிய அணி செயலாளர் அமுதனுக்கெல்லாம், 4-ஆம் தேதி ரயிலுக்கு, இப்போதே முன்பதிவு செய்துவிட்டது அழகிரி தரப்பு.
அரசியலில் (பண)பலம் காட்ட வேண்டியது மு.க.அழகிரிக்கும் அவசியமாகிப்போனது.