ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும், அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் (42) மகாத்மா காந்தி வேடத்தில் கையில் தராசில் பத்து ரூபாய் நாணயங்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வைத்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அத்துடன் கியூ.ஆர்.கோட் மூலம் தனது பயோடேட்டாவையும் கொண்டு வந்திருந்தார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது, “எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம். யோகா பயிற்சியாளராக உள்ளேன். இதுவரை 9 முறை தேர்தலில் நின்று உள்ளேன். இன்று 10-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்துள்ளேன். தேர்தலில் நிற்பதற்காக டெபாசிட் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் தற்போது பத்து ரூபாய் நாணயங்கள் எங்கும் வாங்க மறுக்கிறார்கள். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயங்களை தராசு போட்டு எடுத்து வந்துள்ளேன்” எனக் கூறினார்.
இதேபோல் மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன்(38) என்பவர் கையில் டம்மி ரூபாய் நோட்டுகளுடன் பணத்தூண்டிலுடன் தாக்கல் செய்ய வந்தார். மேலும் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளையும் கைகளில் கொண்டு வந்திருந்தார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது, “இது எனக்கு மூன்றாவது தேர்தல். மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தவறு. சில அரசியல் கட்சியினர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பெறுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூண்டிலுடன் வந்துள்ளேன்” எனக் கூறினார்.