தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார்கோயில் வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த முன்னாள் முதல்வர்; வருங்கால முதல்வர்; அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நன்றிகள். தேர்தல் ஏற்பாடுகள் நன்றாகச் செய்யப்பட்டுள்ளன. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாக்கு மை அழியவில்லை. ஒரு சில இடங்களில் இதுபோன்று நடந்திருக்கலாம்.
இந்தத் தேர்தல் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஈரோட்டைப் பொறுத்தவரையில் எப்போதுமே நாகரீகமான அரசியல்தான் நடைபெறும். அது திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. இங்கு நாகரீகமாகத்தான் நடந்து கொள்வார்கள். ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வார்கள். அப்படி எதுவும் சண்டை வந்தால் அது தொண்டர்களிடையே மட்டும் தான் பிரச்சனை வரும். தலைவர்களிடையே பிரச்சனை எதுவும் வராது” என்றார்.