கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஆசைகாட்டி ஏமாற்றியதாக பாமக தரப்பில் ஆதங்கத்தில் உள்ளனர்.
பாமக கவுன்சிலர் டாக்டர் தமிழரசிக்கு தான் தலைவர் பதவி என முதல்வர் வரை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, திடீரென அதிமுக சார்பில் திருமாறன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக தேமுதிகவை சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் பாமக தரப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அண்ணாகிராமம் ஒன்றிய தலைவராக ஜானகிராமனும், துணைத்தலைவராக தேமுதிகவின் ஜான்சி ராணியும் வெற்றி பெற்றனர். கடலூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த பக்கிரியும் துணை தலைவராக தேமுதிகவைச் சேர்ந்த அய்யனார் என்பவரும் வெற்றி பெற்றனர்.
கம்மாபுரம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த மேனகா தலைவராகவும், முனுசாமி துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். குமராட்சி ஒன்றியத்தில் தலைவராக சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் மனைவி பூங்குழலி தலைவராகவும், ஹேமலதா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீரப்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியுடன் பாமகவை சேர்ந்த தேவதாஸ் படை ஆண்டவர் மனைவி கனிமொழி தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த காஷ்மீர் செல்வி துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் அதிமுக ஒ.செ. கோவிந்தராஜ் மனைவி கலையரசி தலைவராகவும், ஹேமலதா துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். மேல்புவனகிரி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் சிவப்பிரகாசம் தலைவராகவும், சுயச்சை வேட்பாளர் வாசுதேவன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பண்ருட்டி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தம்பி பாலமுருகன் தலைவராகவும், தேவகி துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த கருணாநிதி தலைவராகவும், பாமகவை சேர்ந்த மோகனசுந்தரம் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். திருமுட்டம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த லதா தலைவராகவும், திருச்செல்வம் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். விருத்தாசலம் ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை தலைவராகவும், பாமகவை சேர்ந்த பூங்கோதை துணைத்தலைவராகவும் வெற்றிபெற்றனர்.
காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த சத்யா பர்வீன் தலைவராகவும், செல்வகுமார் துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர். மங்களூர் ஒன்றியத்தில் 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவிற்கு பத்தும், திமுக பத்தும், தேமுதிக 1, பிஜேபி ஒன்று, சுயேச்சை இரண்டு என வெற்றி பெற்றனர். தலைவர் தேர்தலில் திமுக சார்பில் சுகுணா என்பவரும், அதிமுக சார்பில் மலர்விழியும் போட்டியிட்டனர். இருவரும் சம அளவில் வாக்குகள் பெற்றதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரன் உடல்நிலை சரியில்லாமல் தேர்தல் நடத்த வரவில்லை என தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.