கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என். தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவருடைய தந்தை ஜெயசாரதி அதிமுக முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவருடைய தாத்தாவும் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கே.பி முனுசாமியிடம் தனக்கு சீட்டு வேண்டும் என ஜெயசாரதி கேட்டபோது சீட்டு கொடுக்காமல், அதிமுக கே.என் பஞ்சாயத்து செயலாளர் மனைவியான அனிதா என்பவருக்கு சீட் கொடுத்தது அதிமுக. இந்த நிலையில் தான் அனிதாவுக்கு எதிராக தனது மகளையே நிறுத்துவது என்று முடிவெடுத்து பெங்களூரில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்த சந்தியா ராணியை சுயேட்சை வேட்பாளராக நிற்க வைத்துள்ளார் ஜெயசாரதி. தேர்தலில் 210 வாக்கு வித்தியாசத்தில் சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக பேசிய சந்தியா ராணி, மிகுந்த சந்தோசமாகவே இருக்கிறது. எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. என்னுடைய அப்பா ஏற்கனவே தலைவராக இருந்துள்ளார். அவருடன் நானும் பயணித்துள்ளேன். அதனால் எனக்கும் இந்த பணி செய்ய ஆர்வமாகவே உள்ளது. நான் வாக்கு கேட்டு சென்றபோது மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை நிச்சியம் நிறைவேற்றுவேன். அதேபோல எங்கள் கிராமத்தில் பெண் பிள்ளைகளுக்கு கற்றல் கற்பித்தல் நிகழும் நூல்நிலையத்தை உருவாக்குவேன், எங்கள் பஞ்சாத்து மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய யாருடன் சேர்ந்தால் நன்மையை செய்யமுடியுமோ அவர்களுடன் கை கோர்க்க தயங்கமாட்டேன். ஏன் என்றால் 10 வருடங்களாக பஞ்சாயத்து வெறிச்சோடி உள்ளது. நிச்சியம் நான் நேர்மையுள்ள ஒரு தலைவராக என் பஞ்சாயத்திற்கு இருப்பேன் என்றார்.