
சனாதனத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி எழுப்பிய குரலில், மிரண்டு போனது பா.ஜ.க. மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி, ஒட்டுமொத்த பா.ஜ.க. தலைவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.
மக்கள் பிரச்சனைகளுக்காகவும், வடகிழக்கு மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கும் வாய்திறக்காத பிரதமர் மோடி, உதயநிதியின் பேச்சைக் கண்டித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகிறார். அந்த அளவுக்கு, உதயநிதியின், 'சனாதனத்தை ஒழிக்கவேண்டும்' என்ற ஒருவரி செய்தி பா.ஜ.க. தலைவர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. மேலும், திமுகவை எதிர்க்க எந்த சப்ஜெக்ட்டும் இல்லாததால் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் அரசியலை செய்து வருகிறது பா.ஜ.க.
உதயநிதிக்கு எதிராக தமிழக கவர்னர் ரவி முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை புகார்கள் அனுப்பப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத். அந்த கடிதத்தில் உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிராக பல்வேறு விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், “உதயநிதியின் மீது தேசியப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடித விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது.