விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துவிரோதக் கட்சி என்று நிலவும் ஒரு குற்றச்சாட்டை அதன் தலைவர் தொல்.திருமவளவனிடம் தெரிவித்தோம். அதற்கான அவரது பதில்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சி என்று சொல்பவர்கள் எங்களை பாஜக விரோத கட்சி அல்லது ஆர்எஸ்எஸ் விரோத கட்சி என்று சொல்லியிருந்தால் அது பொருத்தம். என் சான்றிதழ் அடிப்படையில் நான் ஒரு இந்து. அது மட்டுமின்றி என்னைச் சுற்றியிருக்கும் உறவுக்காரர்கள் இந்துக்கள்தான். என் தாய், என் உடன் பிறந்தவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் என் சொந்த பந்தங்கள் அனைவருமே இந்து கோட்பாடுகளை பின்பற்றி வாழ்பவர்களே. எனவே நாங்கள் இந்துக்களுக்கும் பாஜகவிற்கும் விரோதமானவர்கள் இல்லை. எந்த கோட்பாட்டை பாஜக உள்வாங்கி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது.
சனாதனம் எனும் கோட்பாட்டினுள் அப்பாவி இந்துக்கள்தான் சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை, அவர்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலையும் நாங்கள் நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் அவ்வளவுதான். இது எல்லோருக்கும் தெரிந்த விவகாரம்தான். ஆனால், எல்லோரும் தொடக்கூடிய ஒரு விவகாரம் அல்ல. எல்லோரும் அறிந்த ஒரு செய்தி ஆனால், எல்லோரும் அதை பேசக்கூடிய அளவிற்கு இருக்கும் செய்தி அல்ல. என்னவென்றால் நாங்கள் சனாதனத்தின் மீது கை வைக்கின்றோம். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எங்களுக்கு முன்னால் பெரியார், அம்பேத்கர் மற்றும் 2500 வருடங்களுக்குமுன் கவுதம புத்தர் போன்றவர்கள் செய்தது. அதைத் தான் இன்று நாம் 'சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம்' என்ற ஒரு முழக்கமாக, மாநாடாக அறிவித்திருக்கிறோம்.
ஊழலால் இந்த நாடு சீரழிந்து வருகிறது, மதுவால் அடுத்த தலைமுறை எதிர்காலம் சிதைந்து வருகிறது. ஆகையால் ஒட்டுமொத்தமாக 'ஊழலாலும் மதுவாலும் இந்த நாடு சீர்கேடு அடைந்து வருகிறது எனவே ஊழலில் இருந்தும் மதுவிலிருந்தும் இந்த நாடை காப்பாற்றுவோம்' என்கின்ற அடிப்படையில் இந்த மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைக்கவில்லை. இதுவெல்லாம் அவசியம்தான் என்றாலும்கூட சனாதன சக்திகளின் போக்குகள் மிகவும் ஆபத்தானவை. 'தாய் மதத்திற்கு திரும்புங்கள்' என்று சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறார்கள். பசுவை தெய்வம் என்கிறார்கள், உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை நிறுவப் போகிறோம் என்று முழங்குகிறார்கள். உடன்கட்டை ஏறும் விஷயத்தையும் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி சனாதனத்தின் போக்கு ஒவ்வொரு நாளும் விரிந்து பரவி கொண்டிருப்பதினால் ஊழலைவிடமும் மதுவைவிடவும் சனாதனம்தான் இந்த தேசத்தை சீரழிக்கக் கூடிய மிக மோசமான விஷயம். ஆகவே அந்தக் கருத்தியல் கொண்ட அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது. அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய நிகழ்வாக திருச்சி மாநாட்டை ஒருங்கிணைத்து வருகிறது.