செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். பொதுவாகவே அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடிக்கடி சொல்வார்கள். பிரதமர் வந்து சென்ற நான்கு மாதம் ஆகிறது. நான்கு மாதம் கழித்து தான் அண்ணாமலை திருவாய் மலர்ந்திருக்கிறார், பாதுகாப்பு இல்லை என்று. ஆனால், தமிழக காவல்துறையின் தலைவர் சொல்லியிருக்கிறார் எந்த விதமான குறைபாடும் இல்லை. முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்.
இவர்கள் யோசித்து யோசித்து குற்றம் சொல்கிறார்கள். குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்கிறார்கள். ஒரு தவறான விளம்பரத்திற்காக இவர்கள் செயல்படுகிறார்களே தவிர இவர்களுக்கு ஆக்கபூர்வமான கொள்கைகள் எதுவும் கிடையாது. தமிழகத்தோடு பிற மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பணிகள் முடிந்து பிரதமர் திறந்து வைத்து விட்டார். ஆனால், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காம்பவுண்ட் சுவரைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கிற பாரத ஜனதா கட்சி டெல்லி சென்று அங்கு செயல்பட வேண்டும். ஏன் எங்கள் மாநிலத்தைப் புறக்கணித்துள்ளீர்கள்? மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது. எங்கள் மாநிலத்தில் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை? வெளியில் எப்படி தலை காட்டுவது என்ற கேள்வியை அவர்கள் கேட்க வேண்டும் அல்லவா. அப்படி செய்தால் தான் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்று பெயர்'' என்றார்.