நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. பலமுறை இதனை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து போட்டியிடுகிறார்கள். பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியை பிடித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்களே தவிர. நிலையான ஆட்சி ஏற்படவில்லை. இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நிலையான ஆட்சி தரக்கூடிய ஆட்சி பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் “விருந்துக்கு வருபவர்கள் சாப்பிட்ட பிறகுதான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள். அதுபோல பா.ஜ.க.வினர் விருந்தினர்களைத் தான் அழைத்துள்ளார்கள். அதனால் வீட்டில் இருப்பவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார். மேலும் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “பா.ஜ.க. மேலிடத்திடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தேர்தல் கூட்டணி தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.