நரேந்திரமோடி ஒரு ஊழல் கருவி என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரச்சாரத்திற்காக சென்ற ராகுல்காந்தி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ‘மோடி ஊழலுக்கு எதிரானவர் கிடையாது. ஊழலே அவர்தான். ஊழலுக்கான கருவி அவர். தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. கோடிக்கணக்கில் காசை செலவு செய்கிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? நீரவ் மோடி, மல்லய்யா உள்ளிட்டோர் தரும் பணத்தைத்தான் அவர்கள் செலவு செய்கிறார்கள்’ என தெரிவித்தார்.
நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை மவுனமாக இருக்கிறார். இதை விமர்சித்த ராகுல்காந்தி, ‘அவருக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. அவருக்கு ஒண்ணே முக்கால் மணிநேரம் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் தேர்வுகளைப் பற்றிப் பேச நேரம் இருக்கும். ஆனால், ஒரு நிமிடம் கூட நீரவ் மோடி குறித்து வாய்திறக்க மாட்டார்’ என தெரிவித்தார்.