“சொத்து பட்டியலை வெளியிடுகிறோம் என உளறும் அண்ணாமலையின் பேச்சுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தவருக்கு நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “அண்ணாமலை பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலை உளறுகிறார். எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவராக இல்லாமலும், தோழமைக் கட்சியாக இல்லாமலும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் கூட இல்லாமல் செயல்படுகிறார்.
அவரது கட்சிக்குக் கூட பெருமை சேர்க்கும் எண்ணம் அற்றவராக அண்ணாமலை இருக்கிறார். சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்று கூட தெரியாமல் பிதற்றுகிறார். அதனால் தான் பாஜக கட்சிக்குக் கூட பெருமை சேர்க்கும் உணர்வு இல்லாதவராக செயல்படுகிறார் என்று கூறுகிறோம்.
இந்தியா தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு புல்வாமா தாக்குதல். 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காரணம் மத்திய அரசு தான். ராணுவ வீரர்களுக்கு போதிய உதவிகள் செய்யவில்லை. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.