பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் மகன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபேயின் மகன் அரிஜித் ஷாஸ்வாத். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பகல்பூர் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாத்நகரில் இனக்கலவரத்தைத் தூண்டிய குற்றத்திற்காக இவர் உள்ளிட்ட ஒன்பது பா.ஜ.க. உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சனிக்கிழமை நடந்தபோது, அரிஜித் சவுபே மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ராஜினாமா வாங்குவதற்காக வந்திருந்த அரிஜித் சவுபே, ‘நான் எதற்காக சரணடைய வேண்டும்? நான் நீதிமன்றத்தில் ராஜினாமா வாங்கிவிட்டேன். நான் எங்கும் ஓடவில்லை. தப்பியோடி தலைமறைவாகும் ஆட்களைத் தான் ஓடிப்பிடிக்க வேண்டும். நான் இங்கேயேதான் இருக்கிறேன்’ என பேசியிருந்தார்.
இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், போலி அரெஸ்ட் வாரண்டுகளை முதல்வர் நிதிஷ்குமார் வழங்குவதாக குற்றம்சாட்டினார். மேலும், ‘நீதித்துறையையும், சட்ட திட்டங்களையும் ஒரு அமைச்சரின் மகன் நிர்வாணப்படுத்திக் கொண்டிருக்கும்போது, முதல்வர் நிதிஷ் எதும் செய்யவில்லை’ எனவும் கூறினார்.