கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானிடமிருந்து வாக்குமூலம் வாங்கியிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. அந்த வாக்குமூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால், அவர் பதறி துடிக்கிறார். தனக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு தரப்பட்டுள்ளது. அதன்படி, பேரவையில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என தெரிகிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "இந்தக் கொடநாடு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சட்டப்பேரவை விதி 55-ன்படி விவாதிக்கக் கூடாது, விவாதிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரை முடக்குவதற்கான சதி இது. இதைப் பேரவையில் விவாதிப்பது உரிமை மீறலாகும். கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்தப் பயமும் கிடையாது" என்று கூறியிருக்கிறார்.