அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள நிலையில் தங்கள் தரப்பின் பலத்தைக் காட்ட இரு அணிகளும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
நேற்று தேனி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சி நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி தொகுதியில் இருந்தும் 150 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
தொடர்ந்து இன்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனது தரப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 19 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுடன் இணைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தின ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் வைத்தியலிங்கம், ஜே.சி.பிரபாகரன், பெரம்பலூர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இருந்தும் கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இனியும் அதில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளேன். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன். ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன். நல்ல முடிவை விரைவில் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.