முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5-ல் அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. இதற்கு அனுமதி வேண்டி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கடிதம் அளிப்பதற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5-ல் அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுவதற்கு அனுமதி கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. அவர்களும் அதற்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் கதை முடிந்த கதை; அது தொடரப்போவதில்லை. மற்றவர்களின் கதையும் அது தான்.
மருத்துவமனையில் சிறுவனுக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த செயல் ஊடகங்களைப் பார்த்து தான் அறிந்தேன். நான் என்ன மருத்துவரா? இல்லை, மருத்துவமனையில் சென்று பார்த்தேனா? ஊடகங்களில் படித்ததுப் பார்த்ததைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும். தவறென்றால் அரசு மறுப்பு கொடுத்துவிட்டு செல்லட்டும். அதை முடிவு செய்ய வேண்டியது மக்களும் அந்தக் குடும்பமும் தான்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். கேள்விகளை முன் வைத்தால், கேள்விகளைப் புரிந்து கொண்டு, மேற்கொண்டு தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் நல்ல விஷயம். எங்கள் ஆட்சியில் இது போல் நடக்கவில்லையே.
ஓபிஎஸ்-ஐ நீக்கியது அதிமுக பொதுக்குழு. கட்சித் தொண்டர்களின் எண்ணம் தான் பொதுக்குழுவின் எண்ணம். ஓபிஎஸ் மாவட்டத்தில் இடைத்தேர்தல் வந்தது. இரண்டு தொகுதிகளும் தோல்வி. அவரது மகன் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இவர் மட்டும் தான் ஜெயிக்கிறார். மற்ற யாரும் வெற்றி பெறவில்லையே.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும். அதில் அதிமுக உறுதியாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் சரி, ஆன்லைன் ரம்மியை வளர்த்து விடும் வேலையைச் செய்யக்கூடாது” எனக் கூறினார்.