கர்நாடக மாநில அரசின் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்து வருபவர் பாஜகவை சேர்ந்த சோமண்ணா. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக வருணா தொகுதியிலும் சாம்ராஜ் நகர் தொகுதி என இரண்டு தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சி தலைவரை எதிர்த்து வருணா தொகுதியில் போட்டியிடுவதால் வருணா தொகுதியில் சோமன்னாவின் வெற்றி கேள்விக்குறி என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சாம்ராஜ் நகரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அமைச்சர் சோமண்ணா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேட்புமனுவை திரும்பப் பெரும் கடைசி நாளான கடந்த 21ம் தேதி சாம்ராஜ் நகரில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் ஆலுர் மல்லுவிடம் வேட்புமனுவை வாபஸ் பெற்றால் தங்களுக்கு 50 லட்ச ரூபாய் பணத்தை தருவதாகவும், அதோடு சட்ட மேலவை உறுப்பினராக்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் சோமண்ணா தொண்டர் ஒருவரின் செல்போனில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஆலுர் மல்லுவிடம் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக அல்லாத மாநில அரசுகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி பாஜகவிற்கு சட்டவிரோதமாக வர வைக்கும் பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' திட்டத்தினை சோமண்ணா இங்கேயும் முயற்சி செய்கிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் சோமண்ணாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ்பாபு கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவிக்கையில், "இதுபோன்ற வீடியோக்களில் சில உண்மையும் இருக்கலாம், சித்தரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எனவே இந்த வீடியோ உண்மைதானா என ஆய்வு நடத்தி வருகிறோம். உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.