கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து அக்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக வந்துகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என காங்கிரஸ் தனது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் ஆம் ஆத்மி, மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் ஆறு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு. வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு 80% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, நேற்று கோலார் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “விவசாய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்ற புகார் இருப்பதை அறிந்தேன். இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ. 2 இலட்சம் வழங்கப்படும்” என்று பேசினார்.