மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணத்தில் 3 ஆயிரம் கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையில் இறங்கியது. இதை எதிா்த்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த திட்டம் அங்கிருந்து கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனப் போராடியதால் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் வருவது குறித்து மறைமுகமாகப் பேசிவிட்டுச் சென்றார். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியதோடு மீனவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு வந்த உத்தரவு கடிதத்தை அ.தி.மு.க.வின் தளவாய் சுந்தரம் பத்திரிகையாளர்களிடம் காட்டி திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறினாா். ஆனால் இதை மீனவா்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதாிக்கப் போவதில்லை என்றும் மீனவ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறினர்.
இது கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தளவாய் சுந்தரத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் மீனவர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் அதுவும் ஓன்று. இதற்கிடையில் இன்று (30/03/2021) கன்னியாகுமரியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற தளவாய்சுந்தரம், "கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் இனி வரவேவராது. அப்படி வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன். அதேபோல் நான் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கபட்ட பின் இந்த திட்டம் வரும் என்றால், அப்போது உடனே எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு அரசியலையும் விட்டு விலகி விடுவேன்" என மீனவர்களிடம் உருக்கமாக உறுதியளித்தார்.