
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நேற்று (26.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் உரையாடினார். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளாக இன்றும் (27.04.2025) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அக்கட்சியின் 13 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து இந்தநிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விஜய் இன்று மாலை கோவையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப உள்ளார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனையொட்டி விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாகக் கோவை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பெரும் அவதியுற்றனர். அதே சமயம் விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஓய்வு எடுக்கச் சென்ற தனியார் விடுதி வரையில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமலும், உரிய அனுமதி பெறாமலும் அதிக அளவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர த.வெ.க. மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.