Skip to main content

“இனிமேல் பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்க விடமாட்டேன்” - தவெக தலைவர் விஜய்!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

TVk leader Vijay says he did not come to seize power by lying

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று (26-04-25) கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும் இந்த மண்ணோட மக்களோட மரியாதை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். பேர் தான் பயிற்சி பட்டறை, ஆனால் இங்கு வேற எதோ ஒரு நிகழ்ச்சி நடப்பது மாதிரி இருக்கிறது. பூத் லெவெல் மீட் அப்படியென்றாலே, ஓட்டு சம்பந்தப்பட்டதாக தானே இருக்கும். ஆனால், என்னை பொருத்தவரைக்கும் இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கிற மீட் கிடையாது. ஆட்சி, அதிகாரம் என்றாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது தானே? இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம்?. 

ஒன்று, இதுவரைக்கும் செய்த மாதிரி எல்லாம் நாம் செய்யப்போவதில்லை. இரண்டாவது, நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறதே மக்களுக்காக தான், மக்களோட நலனுக்காக தான்.  இந்த பயிற்சி லெவல் பயிற்சி பட்டறையில், மக்கள்கிட்ட எப்படி நாம் ஓட்டு வாங்கப் போகிறோம் என்பதை மட்டுமே பேசப்போகிற ஒரு பயிற்சி பட்டறை கிடையாது. அதையும் தாண்டி, மக்களோடு நாம் எப்படி ஒன்றாக இருக்கப் போகிறோம்? என்பதை பற்றி உரையாட தான் இந்த பயிற்சி பட்டறை. இதற்கு முன்னாடி நிறைய பேர் வந்திருக்கலாம், போயிருக்கலாம், நிறைய பொய்களை சொல்லிருக்கலாம், மக்களை ஏமாற்றி இருக்கலாம். இதையெல்லாம் செய்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதை செய்வதற்கு நான் இங்கு வரவில்லை. இனிமேல் அதெல்லாம் நடக்காது, நடக்கவிடப் போறதும் கிடையாது. 

நம் கட்சி மீது மக்கள்கிட்ட ஒரு பெரிய நம்பிக்கை பெறப்போவதே தேர்தல் களப்பணியில் பூத் லெவல் ஏஜெண்ட்களான நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்திருக்கோம், எதற்கு வந்திருக்கோம், எப்படிப்பட்ட ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்பதை மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என்று மக்கள் கண்டிப்பாக கேட்பார்கள். ஆனால், நீங்கள் யார்? உங்களுடைய தகுதி என்ன? என்பது எனக்கு தெரியும். நம்மகிட்ட நேர்மை இருக்கு, கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது, லட்சியம் இருக்கிறது, உழைப்பதற்கு தெம்பு இருக்கிறது, பேசுவதற்கு உண்மை இருக்கிறது, செயல்படுவதற்கு திறமை இருக்கிறது, அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது, இதற்கு மேல் என்ன இருக்கிறது. போய் கலக்குங்க. நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசினார்.  

சார்ந்த செய்திகள்