
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நேற்று (26.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில் தவெக அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் உரையாடினார். இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் (27.04.2025) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அக்கட்சியின் 13 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி 2ஆம் நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விஜய் இன்று மாலை கோவையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப உள்ளார்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வாக்களிக்கும் வயதிற்கும் குறைவானவர்கள் (சிறுவர் - சிறுமிகள்) கூட நிறையப் பேர் காணப்பட்டார்கள். எனவே குழந்தைகள் அணி என்பதை விடுவிக்க வேண்டும். குழந்தைகளை அரசியலுக்குக் கொண்டு வரலாம். ஆனால் படிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். விஜய் களத்திற்கு இறங்கி வந்திருப்பது மகிழ்ச்சி. வொர்க் ப்ர்ம் ஹோம் (WORK FROM HOME) என்பதில் இருந்து வொர்க் ப்ர்ம் பில்டிற்கு (WORK FROM FIELD) வந்தது மகிழ்ச்சி.
ஆளும் கட்சியான திமுகவை விஜய் இன்னும் எதிர்க்க வேண்டும். ஏனென்றால் முதல் எதிரி திமுக-வாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை. த.வெ.க.விற்கு இன்னொரு வேண்டுகோள் என்னவென்றால் இந்த நாட்டை பலம் பொருந்திய கட்சியாக பாஜக ஆட்சி செய்து கொண்டுள்ளது. சம்பிரதாயத்திற்காக பாஜகவை எதிர்க்க வேண்டும் என நினைக்காமல் முழு எதிர்ப்பையும் திமுக கூட்டணியிடம் காண்பிக்க வேண்டும் என்பது எனது கருத்து” எனப் பேசினார்.