நாகை மாவட்ட தி.மு.க.வினர் எப்போதுமே இல்லாத அளவிற்கு போட்டிப்போட்டுக்கொண்டு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வில் முதல் ஆளாக கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் உதயநிதி ஸ்டாலின். அவரை பிரச்சாரத்தில் இருக்கும்போதே தொடர்ந்து கைதுசெய்து பரபரக்க செய்தனர் காவல்துறையினர். தி.மு.க. நிர்வாகிகளோ, சாலை மறியல், போராட்டம் என ஆவேசம் காட்டி உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடிக்கும்படி செய்துகொண்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளின் திடீர் ஆக்ரோஷத்தைக்கண்ட பலரும் "இதெல்லாம் தேர்தல் படுத்தும் பாடு" என்றனர்.
இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு அளிப்பது, ரத்ததான முகாம் நடத்துவது, வேட்டி, புடவை, அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்குவது, நிவாரண முகாம்களின் இருப்பவர்களுக்கு உதவுவது என ஜமாய்த்திருக்கின்றனர் நாகை மாவட்ட தி.மு.க.வினர்.
அந்த வகையில், வேதாரண்யம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் என்.சதாசிவம், தனது ஆதரவாளர்களோடு ஆதனூர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு, வேட்டி, புடவை, கொசுவலை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
மயிலாடுதுறை வழக்கறிஞர் அணி செயலாளர் ராமசேயோன், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி அணியை உருவாக்கி நிவாரணம் கொடுத்து வந்தார். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவு, நிவாரண பொருட்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி என கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.
உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வத்தபோது ராம.சேயோன் தருமபுரம் ஆதீனத்தின் சன்னிதானத்தை சந்திக்க வைத்து, நீண்ட நேரம் அரசியல் பேச வைத்தார். அப்போது "நிச்சயம் பிரச்சாரம் வெற்றியடையும்" என சன்னிதானம் உதயநிதிக்கு ஆசி வழங்கியது அ.தி.மு.க.வினரையே வியப்படைய செய்தது.
குத்தாலம் தொகுதியை சேர்ந்த மாதிரிமங்கலம் வழக்கறிஞர் புகழரசன், நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு ரத்ததான முகாம் நடத்தியிருக்கிறார். வழக்கறிஞர் புகழரசன் முன்னாள் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான மாதிரிமங்கலம் கண்ணையனின் மகன் ஆவார். புகழரசனுக்கு கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு இல்லை என்றாலும் தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பம் என்பதால் கலைஞர் பெயரில் தி.மு.க.வில் உள்ள வயதானவர்களுக்கு மாதமாதம் 600 ரூபாய் ஒய்வூதியம் வழங்கி வருகிறார். ஸ்டாலின் பெயரில் நலிவடைந்த குடும்பங்களை இனம்கண்டு தினசரி உதவி செய்துவருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் பெயரில் இளைஞர்களுக்கும் படிக்கும் பிள்ளைகளுக்கும் உதவிவருகிறார். அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ரத்ததான முகாம் நடத்தி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுக்க செய்திருக்கிறார். "யார் அந்த பையன், கட்சியில என்ன பொறுப்பில் இருக்கிறார்" என சமீப நாட்களாகவே தி.மு.க. தலைமையின் பார்வை புகழரசன் மீது விழுந்திருக்கிறது.
இப்படி தி.மு.க.வினரின் கொண்டாட்டம், அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க செய்திருக்கிறது. எல்லாம் தேர்தல் படுத்தும்பாடுதானோ.