பொதுமக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, தங்களுடைய செய்திகளை அறிவிக்கும் தி.மு.க.வின் கிராம சபைக் கூட்டம், தனி நபரின் பிரச்சனைகளை அறிவிக்கும் கூட்டமாக மாறியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் செய்திகளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் திட்டம் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனப் பெயரிடப்பட்டு, 75 நாட்களில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அதேவேளையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் செய்திகளையும் மக்களிடம் சேர்க்க கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 15 நபர்களை நியமித்து, கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க பயணத்தை துவங்கினர் தி.மு.க.வினர்.
இதன் ஒரு கட்டமாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான கனிமொழி பங்கேற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னதுரை, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கனிமொழி முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நபர்களில் பெரும்பான்மையோர் குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு ஆதரவாக, தேர்ந்தெடுக்கப்படாத சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் குறித்து அரசியல் பேசினர். மாறாக எந்த ஒரு பொது பிரச்சனையையும் பேசவில்லை. மூன்று பெண்கள் குடிநீர், பட்டா வழங்காதது குறித்துப் பேசிய நிலையில், மாணவி ஒருவர் மட்டுமே கல்விக்கடன் மற்றும் பேருந்து அட்டை குறித்து பேசினார்.
இறுதியில் மைக் எடுத்த கனிமொழி, “ஸ்டாலின் முதல்வரானால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நான் விவசாயி எனக்கூறும் எடப்பாடி பச்சை துண்டை கட்டிக்கொண்டு விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார்" என்றார். “எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்க, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் குறிப்பிட்ட ஒருவருக்காக இத்தனை நபர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? திமுக தலைவர் ஸ்டாலின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் கிராம சபைக் கூட்டம் யாரோ ஒருவருக்காக திசை மாறுவது எப்படி?" என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் காரைக்குடி நகர தி.மு.க. நிர்வாகிகள்.
படம் : விவேக்