சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பியுமான கனிமொழி கருணாநிதி சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
கனிமொழி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில், “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அந்த அவதூறு காணொலியில் எனது கட்சிக்காரர் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டு ‘அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய் மற்றும் கலைஞர் டிவியில் 800 கோடி ரூபாய், மொத்த மதிப்பு 830.33 கோடி’’ என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.
இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல... அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது மற்றும் ஆவணங்களில் - பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் என் கட்சிக்காரர் கலைஞர் டிவியில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில் எவ்வித அடிப்படை தகவல்களையும் சரிபார்க்காமல் என் கட்சிக்காரரின் நற்பெயரைக் குலைப்பதை உள்நோக்கமாகக் கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பிவிடும் வகையிலும், திமுகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. இந்த அவதூறு வீடியோவை பார்த்து என் கட்சிக்காரரின் நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்திருக்கிறார்கள்.
மேலும் என் கட்சிக்காரரின் தொகுதியிலிருந்து மக்களும் கட்சியினரும் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் வைத்திருந்த மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். உங்களது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மேற்கண்ட அவதூறு வீடியோவை இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது எனது கட்சிக்காரர் சார்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.