நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். கலைஞர் இல்லாத முதல் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றது ஸ்டாலினின் அரசியலுக்கு பெரிய அஸ்திவாரமாக அமைந்தது. இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூண்டு பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் திமுக முன்னெடுத்து அதற்கான மனுவை சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்தனர். இதனை ஏற்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்ட சபையில் ஜூலை 1 ஆம் தேதி நடக்கும் என்று தனபால் தெரிவித்தார். இந்த நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். இது பற்றி திமுகவினரிடம் விசாரித்த போது சபாநாயகரை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவதால் ஆட்சி மாற்றமோ, ஆட்சிக்கு பாதிப்போ வரப்போவதில்லை அதனால் திமுக தலைமை நன்கு யோசித்து தெளிவான முடிவை எடுத்துள்ளார் என்று கூறினர்.
திமுக பின்வாங்கிய முடிவை யாரும் சர்ச்சையோ, விவாதமோ செய்ய முடியாத வகையில் தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் இணைத்து அதிரடி காட்டியது தான் என்கின்றனர். மேலும் தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் இணைத்துள்ளதால் தேனி மாவட்டத்தில் திமுக வலிமை அதிகமாகும். ஓபீஎஸ்க்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வனை களம் இறக்கினால் பன்னீர்செல்வத்தின் பலத்தை குறைக்க முடியும் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதனால் ஒரே நாளில் இந்த இரண்டு விஷயத்திலும் திமுக சரியாக காய் நகர்த்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.