ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 8 ஆம் தேதி (08-06-2024) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுகவின நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களைவை கொறடாவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.யும், மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி.யும், மாநிலங்களவை கொறடாவாக திமுக தலைமைக் சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி.யும், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி.யும் நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.