சட்டப் பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநருக்கும் திமுக அரசிற்குமான பனிப்போர் தற்பொழுது வரை நீடித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை, தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், பேரவையில் அங்கமாக விளங்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் ஆளுநருடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த தேநீர் விருந்தில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இபிஎஸ் சேலத்தில் இருப்பதால் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.