கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும், கடவுளைப் போற்றும் பக்திப் பாடல்களையும் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மதச் சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாகப் பேசுதல், உண்மைகளைத் திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் செயல்களைச் சுரேந்திர நடராஜன் என்பவர் வீடியோ பதிவுகளாக கருப்பர் கூட்டம் என்ற யூ-ட்யூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார்.
பல கோடி மக்களின் மன உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, தமிழகத்தில் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் சுரேந்திர நடராஜனின் செயல்பாடுகளின் பின்னணியில் சமூக விரோத, தேச விரோத, இந்து விரோத அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த கஷ்டி கவசம் என்பது ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் தினசரி ஒலிக்கும் சிறந்த பக்தி பாடலாகும். கந்த சஷ்டி கவசத்தைக் கேட்கும் போதே தமிழ் மக்களின் மனதில் ஏற்படுகிற மன அமைதியை இறை நம்பிக்கையை இவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தைப்பூச பண்டிகை நாட்களில் கடுமையான விரதம் இருந்து தமிழ்க் கடவுள் முருகனுடைய அறுபடை வீடுகளை நோக்கி, கோடிக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று முருகனை தரிசனம் செய்கிறார்கள். மேலும் சஷ்டி காலத்தில் லட்சோப லட்ச முருக பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து தமிழ்க் கடவுள் முருகனை தரிசித்து வருகிறார்கள். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
சுரேந்திர நடராஜன் போன்றவர்களைக் கண்டித்தும், இவரைத் தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பாக வியாக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறவழி கண்டனப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நானும் எனது வீட்டின் முன்பாக நடக்கும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். முருக பக்தர்களின் மனம் புண்படக்கூடிய வகையில் செயல்படுபவர்கள் யாருடைய பின்புலத்தில் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில், ஒடுக்குவதில் பா.ஜ.க. உறுதியாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் தனது இல்லத்தின் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறறது. முருகனை இழிவுப்படுத்திய அந்தச் சேனலை தடை செய்ய வேண்டும். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.